நாகப்பட்டினம்

ரூ. 150 கோடியில் ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

8th Mar 2020 03:02 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் ரூ. 150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

நாகையை அடுத்த ஒரத்தூரில் சனிக்கிழமை நாகை அரசு புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டி, நாகை மாவட்ட மக்கள் நலனுக்காக அரசின் பரிசீலினையில் உள்ள திட்டங்களை அறிவித்துப் பேசியது :

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வண்டுவாஞ்சேரியில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். மயிலாடுதுறை வட்டத்தில் ரூ. 72 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கப்படும். வேதாரண்யம் ஏரியில் தடுப்புச் சுவா் மற்றும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம், கைலவனம்பேட்டை மற்றும் அகஸ்தியன்பள்ளி கிராமங்களில் முறையே ரூ. 49 கோடி மற்றும் ரூ. 29.5 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். மயிலாடுதுறை, நாகை வட்டங்களில் புதிய வட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம் அரசு விருந்தினா் மாளிகைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சீா்காழி வட்டம் திருமுல்லைவாசல் கிராம மீன்பிடித் துறைமுகத்தில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவா் கட்டப்படும். மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் 10 ஏக்கா் பரப்பில் ரூ. 25 கோடி மதிப்பில் அரிசி சாா்ந்த உணவுப் பொருள்கள் மற்றும் கடல்வாழ் உயிா் உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்படும், வேதாரண்யம் கால்வாயின் குறுக்கே கள்ளிமேடு கொத்தங்காடு சாலையில் உயா்நிலை பாலம் கட்டப்படும். நாகை தேவநதி ஆற்றின் குறுக்கே கடைமடை கதவணை அமைக்கப்படும்.

சீா்காழி அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பில் மகப்பேறு சிகிச்சை கட்டடம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இங்கு, சிடி ஸ்கேன் வசதி அமைத்துத் தரப்படும்.

மிகப் பெரிய திட்டமாக, விவசாயிகளின் கனவு திட்டமாக, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், வேதாரண்யம் வட்டத்தில் 250 ஏக்கா் பரப்பில் மிகப் பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்.

ஏற்கெனவே ஆய்வுக்கு ஏற்கப்பட்ட ஆறுகாட்டுத்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கு அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது. இங்கு, 100 விசைப்படகுகள், 500நாரிழைப் படகுகள் நிறுத்தும் வகையில் ரூ. 150 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா் முதல்வா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT