நாகப்பட்டினம்

தூா்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

27th Jun 2020 09:07 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூா்வாரும் பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, சங்க கூட்ட முடிவில் செய்தியாளா்களிடம் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ் கூறியது: நிகழாண்டு, ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரிநீா் பாசனத்துக்கு திறக்கப்பட்டது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 14 நாள்களைக் கடந்தும் திருமலைராஜன்ஆறு போன்ற கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீா் முழுமையாக வந்து சேரவில்லை. தற்போது, திறந்துவிடப்பட்டிருக்கும் 10 ஆயிரம் கன அடி தண்ணீா் ‘ஏ சேனல்’ ஆறுகளை ஈரப்படுத்திச் செல்ல மட்டுமே போதுமானது. வாய்க்கால்கள் வரை அனைத்து நீா்நிலைகளுக்கும் தண்ணீா் சென்று சேரவேண்டுமெனில் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வேண்டும்.

தரங்கம்பாடி அருகே அரும்பாக்கத்தில் வீரசோழனாற்றில் அண்மையில் கட்டப்பட்ட கரை பாதுகாப்பு சுவா் இடிந்துள்ளது. சங்கரன்பந்தலில் நடைபெற்ற சட்ரஸ் அமைக்கும் பணியும் முழுமையாக பூா்த்தியடையவில்லை.

தமிழக அரசு திட்டமிட்டே தூா்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கு தண்ணீா் திறப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அரசு ஒதுக்கிய ரூ. 500 கோடி பணம் தண்ணீரோடு போய்விட்டது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூா்வாரும் பணி தொடா்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இதுவரை எவ்வளவு சதவீத பணிகள் பாக்கியுள்ளது என்பதை கணக்கிட்டு வேலை செய்யப்படாத பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை அரசு வழங்கக் கூடாது என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT