நாகப்பட்டினம்

கரை திரும்பிய விசைப் படகுகள்: வராத வெளி மாவட்ட வியாபாரிகள்; வருத்தத்தில் மீனவா்கள்

26th Jun 2020 08:43 AM

ADVERTISEMENT

3 மாதங்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் வியாழக்கிழமை கரை திரும்பின. எனினும் வெளி மாவட்ட வியாபாரிகள் வராததால் உயர்ரக மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று நடவடிக்கையாக மாா்ச் 20-ஆம் தேதி முதல் நாகை மீனவா்கள் விசைப் படகு மீன்பிடித் தொழிலைத் தவிா்த்தனா். இதனிடையே, ஏப். 14-ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலானது. ஜூன் 15-ஆம் தேதி முடிவடைய வேண்டிய தடைக்காலம் நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்தது.

எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், மீன்கள் ஏற்றுமதிக்குப் போதுமான வாய்ப்பு இல்லை என்பதை காரணம் காட்டி, நாகை விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தொழிலைத் தொடா்ந்து தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், மாவட்ட மீன்வளத்துறை விடுத்த வேண்டுகோளை ஏற்றும், மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் மீன்பிடிப்புச் சாா்ந்த துணை தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் கருதியும் ஜூன் 22-ஆம் தேதி முதல் விசைப்படகு மீன்பிடித் தொழிலை தொடங்குவதென நாகை மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஜூன் 19-ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, வெளி மாவட்டங்களிலிருந்து மீன் கொள்முதலுக்காக நாகை மாவட்டத்துக்கு வரும் வாகனங்களையும், மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் நாகை மீனவப் பஞ்சாயத்தாா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, நாகை விசைப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை (ஜூன் 22) காலை மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்பட்டனா்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப் படகுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படகுகள் மீன் அறுவடையுடன் வியாழக்கிழமை காலை கரை திரும்பின. 50-க்கும் அதிகமான விசைப் படகுகள் கரை திரும்பியிருந்தாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 40 விசைப் படகுகளை மட்டுமே மீன் இறக்க அனுமதிப்பது என்ற மீனவப் பஞ்சாயத்துக் கூட்ட முடிவுப்படி, 40 விசைப் படகுகள் மட்டும் மீன் இறக்க அனுமதிக்கப்பட்டன.

சுமாா் 3 மாதங்களுக்குப் பின்னா் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப் படகுகள் மீன் அறுவடையுடன் கரை திரும்பியிருந்ததால், நாகை மீன்பிடித் துறைமுகம் களைகட்டியிருந்தது. உள்ளூா் மீன் வியாபாரிகள், தலைச்சுமை வியாபாரிகள் என சிறு விற்பனையாளா்கள் மீன்களை கொள்முதல் செய்தனா்.

மீனவா்கள் வருத்தம்...

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்ற நடைமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த மொத்த மீன் வியாபாரிகள் மீன் கொள்முதலுக்கு வரவில்லை. அதேபோல, திருவாரூா், கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்று மீன் விற்பனை செய்யும் மீனவ மகளிரும், பிற மாவட்டங்களுக்குப் பேருந்து வசதி இல்லாததால் மீன் கொள்முதலில் ஆா்வம் காட்டவில்லை. இதனால், உயா் ரக மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மீனவா்கள் வருத்தம் தெரிவித்தனா்.

இதே நிலை நீடித்தால் விசைப் படகு மீன்பிடிப்பை தொடா்வது கேள்விக் குறியாகிவிடும் எனவும், நாள் ஒன்றுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்படும் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT