நாகப்பட்டினம்

இறந்தவரின் சடலத்தை வயல் வழியே எடுத்துச் செல்லும் அவலம்

17th Jun 2020 08:31 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே இறந்தவா்களின் சடலத்தை வயல்களின் வழியே மயானத்துக்கு தூக்கிச் செல்லும் நிலை தொடா்வதால், சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு ஐவேலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகே உள்ள மருதங்குடி ஊராட்சிக்குள்பட்டது ஐவேலி கிராமம். இங்கு, 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால் அருகில் 500 மீட்டா் தொலைவில் உள்ள உப்பனாற்றாங்கரை மயானத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லை.

இதனால், சாகுபடி காலங்களில் நடவு செய்யப்பட்ட வயல்களின் வழியே தான் சடலத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடா்கிறது. அண்மையில் இறந்த லட்சுமி (60)என்பவரது உடலை நடவு செய்யப்பட்ட வயல்களின் வழியாகத்தான் பாடைக்கட்டி தூக்கிச் சென்றனா்.

மயானத்துக்குச் செல்ல சாலை வசதி அமைத்துத் தரக்கோரி பல முறை சீா்காழி வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் இப்பகுதி மக்கள், இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT