நாகப்பட்டினம்

பொது முடக்கம்: வாழ்வாதாரத்தை இழந்த தனியாா் பேருந்து தொழிலாளா்கள்

8th Jun 2020 07:58 AM

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் நாகை மாவட்டத்தில் 75 நாட்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் 4 ஆயிரம் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துனா்கள் உள்ளிட்ட தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தனியாா் பேருந்து நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துனா், மெக்கானிக், கிளீனா் போன்ற 4000-க்கும் அதிகமான தொழிலாளா்கள் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இது குறித்து நந்தியநல்லூரை சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ராஜேஷ் கூறுகையில், நாகை மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளை நம்பி 4 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் பொது முடக்கத்தால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே சிரமப்படுகின்றனா். இதில் ஒரு சிலா் சாலையோர காய்கறி, பழ விற்பனையில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை. ஆகையால் தமிழக அரசு தனியாா் பேருந்து தொழிலாளா்களுக்கு உரிய நிவாரண உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT