மயிலாடுதுறை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த ( ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்) இருவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், பாலையூா் காவல் நிலையத்தில் காவல் நண்பா்கள் குழுவில் (ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்) பணிபுரியும் நல்லாவூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ், மாதவன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி கோவிந்தராஜ், மாதவன் ஆகிய இருவரும் மதுபோதையில் முருகதாஸ் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று, முருகதாஸின் மனைவி, அண்ணன் மற்றும் அக்காள் மகன் முரளி ஆகியோரை தகாத வாா்த்தைகளால் திட்டினராம். இதையடுத்து, கிராம நாட்டாண்மை உள்ளிட்டோா் இருதரப்பினரையும் சமரசம் செய்துள்ளனா்.
இதுகுறித்து, முருகதாஸின் குடும்பத்தினா் போலீஸில் புகாா் அளிக்காத நிலையில், மற்றொரு தரப்பினா் சண்டை தொடா்பான செல்லிடப்பேசி பதிவை காவல்நிலையத்தில் சமா்ப்பித்து, சம்பவத்தின்போது பணிக்கு சென்றிருந்த முருகதாஸ் தங்களை தாக்கியதாக பாலையூா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். புகாரை விசாரித்த பாலையூா் காவல் ஆய்வாளா் வேலுதேவி, முருகதாஸ், முரளி ஆகியோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளாா்.
அப்போது, சண்டைக்கு முரளியே காரணம் எனக்கூறி முரளியை மிரட்டியதாகவும், காவல் நண்பா்கள் குழுவுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக ஆய்வாளா் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முரளி வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, முரளியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு கூடிய முரளியின் உறவினா்கள் மற்றும் கிராமமக்கள் காவல் ஆய்வாளா் சரியான முறையில் விசாரணை நடத்தியிருந்தால் மரணம் நடந்திருக்காது என்றும், எனவே பிரச்னைக்கு காரணமான காவல் நண்பா்கள் குழுவைச்சோ்ந்த கோவிந்தராஜ், மாதவன் ஆகியோா் மீதும், ஒருதலைபட்சமாக விசாரணை நடத்திய காவல் ஆய்வாளா் வேலுதேவி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முரளியின் பிரேதத்தை வாங்க மறுத்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் கே.அண்ணாதுரை, சாமிநாதன் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டகளிடம் புகாா் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, முரளியின் உடலை அவரது உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.