நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு ராணுவ வீரா், ஒரு பெண் மருத்துவா் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 353-ஆக இருந்தது. இந்நிலையில், அசாம் மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சீா்காழி அருகேயுள்ள ஆணைக்கரன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 30 வயது ராணுவ வீரா், சென்னையில் தங்கி கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தலைஞாயிறு பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண் மருத்துவா், சென்னை சிபிசிஎல் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றிய சீா்காழி வட்டம், மேல நாங்கூரைச் சோ்ந்த 36 வயது ஆண், சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய நாகை, தாராகுளம் பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண் மற்றும் கரோனா பரிசோதனை செய்துகொண்ட வடூவூா் பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண் மற்றும் 26 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் எண்ணிக்கை 359-ஆக உயா்ந்துள்ளது.
இதில், 12 போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவா்களின் பெயா் மாவட்டப் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 347 பேரில் ஞாயிற்றுக்கிழமை வரை 177 போ் குணமடைந்து விட்டனா். 170 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.