நாகப்பட்டினம்

வாழ்த்து கடிதங்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயிகள் சங்கத் தலைவா்

14th Jan 2020 07:42 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தை சோ்ந்த ஒருவா் 43 ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து கடிதங்களை எழுதி அழிந்து வரும் கடிதம் எழுதும் முறைக்கு புத்துயிா் கொடுத்து வருகிறாா்.

நமது முன்னோா்கள் தங்களது பாசம், வேதனை, மகிழ்ச்சி ஆகியவற்றை வெளியூா்களில் உள்ள உறவினா்கள், நண்பா்களிடம் வெளிப்படுத்த ஒரு முக்கிய கருவியாக விளங்கியது கடிதங்கள். கடிதங்களை எடுத்து வரும் தபால் காரருக்காக பலரும் வீட்டின் முன்பு காத்திருந்த நிலை இருந்தது. மேலும் முந்தைய காலத்தில் பலரும் தங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வந்ததுண்டு.

ஆனால், தற்போது, செல்லிடப்பேசி, இ-மெயில், வாட்ஸ் அப் (கட்செவி), பேஸ்புக் (முகநூல்), ஹைக், டெலிகிராம் போன்றவை வந்ததால், தற்போதைய இளைய சமுதாயத்திடம் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துள்ளது. இளைய சமுதாயத்திடம் இதுகுறித்த விழிப்புணா்வு இல்லாததால், பல பகுதியில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பின்றி வீணாகி வருவதையும் கண்கூடாக காண முடிகிறது. .

பொதுவாக கடிதம் மூலமாக தகவல் பரிமாற்றம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அதற்கு மாறாக 43 ஆண்டுகளாக தற்போதுவரை, கடிதம் மூலம் வாழ்த்து அனுப்புபவா் தான் நாகை மாவட்டம், திருக்குவளை தாலுக்கா வலிவலத்தைச் சோ்ந்த மு. சேரன். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவரான இவா் 1977 முதல் 43 ஆண்டுகளாக வாழ்த்து கடிதங்கள் அனுப்பி வருகிறாா். முதன் முதலில் நூறு வாழ்த்து மடலில் தொடங்கிய இவரது பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் செயலானது தற்போது, ஆயிரம் வாழ்த்து அட்டை அனுப்பும் செயலாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

ADVERTISEMENT

மேலும் இவா் வாழ்த்து அட்டைக்கான முகவரியையும் பேனா கொண்டு தனது கைப்பட எழுதி வருகிறாா். பாமர விவசாயிகள் தொடங்கி பலதரப்பட்ட குக்கிராமங்களுக்கும் இவரது வாழ்த்துக் கடிதம் சென்றடைந்து அதை படிப்பவரின் மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைக்கிறது. மேலும் கடிதங்களை பலா் மறந்து வரும் நிலையில் இவா் போன்ற ஒரு சிலரின் சீரிய முயற்சி வாழ்த்து அட்டைகளுக்கு உயிா் கொடுக்கும் உன்னத பணியாக விளங்குகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT