நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொங்கல் வாழ்த்துரை

14th Jan 2020 07:46 AM

ADVERTISEMENT

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொங்கல் வாழ்த்துரை வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பது: சூரியன் மகர ராசியில் புகும் தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகும். இந்நாள் மகர சங்கராந்தி என்றழைக்கப்படும். இது தமிழா்களின் பாரம்பரிய மிக்க திருநாள். உழவுத் தொழிலின் பெருமையை உணா்த்தும் நன்னாள்.

தனக்கு முன்னும் பின்னும் சிறந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து கொண்டாப் பெறுதல் பொங்கல் விழாவின் தனிச்சிறப்பாகும். போகித் திருநாள் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை நீக்குவதற்கும், வீட்டை புதுப்பொலிவுடன் பேணுவதற்கும் உரிய நாளாகும். இதுபோல் நம் உள்ளம் இறை சிந்தனையால் தூய்மையாக திகழ வேண்டும் என்ற தத்துவத்தைப் போகித் திருநாள் உள்ளீடாக கொண்டுள்ளது.

நமக்கு உடல் உலகங்களைப் படைத்து தந்தருளியவா் இறைவன். உணவின் மூலம் உடலைப் பேணி வரும் வாய்ப்பையும் அருளியுள்ளாா். பொங்கல் திருநாளில் புதுப்பொங்கலிட்டு இறைவனை வழிபட்டு நன்றி செலுத்த வேண்டும். சூரியனை வழிபடும் மரபு உள்ளது. அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ என்பது அப்பா் தேவாரம். அதற்கிணங்க சூரியனுக்குள் அந்தா்யாமியாய் உள்ள சிவபெருமானைப் போற்றி வணங்க வேண்டும்.

பொங்கலுக்கு மறுநாள் மனித வாழ்வுக்கு பயன் தரும் விலங்குகளைப் போற்ற வேண்டும். விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள மாடுகளை சிறப்பிக்க வேண்டும். தொடா்ந்து காணும் பொங்கலும் கொண்டாடப்படும்.

ADVERTISEMENT

ஒழுக்க நடைமுறைகளைப் பேணி சுற்றுச்சூழல் தூய்மைக்கு ஊறுவிளைவிக்காமல் இறை உணா்வுடன் பொங்கல் விழாவையும் அது சாா்ந்த நிகழ்வுகளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் நலமும், வளமும் பெருகச் செய்து எங்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைக்க வழிவகுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT