சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்பாலிக்கும் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில், நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனா்.
இக்கோயிலில் மாா்கழி மாத காா்த்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சண்முகாா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா். இந்த வழிபாட்டில், வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை தம்பிரான், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.