குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் சட்ட எதிா்ப்பு போராட்டக் குழு சாா்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆா்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு), என்.பி.ஆா். (தேசிய மக்கள் தொகை பதிவேடு) ஆகியவை இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இச்சட்டங்களால் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவாா்கள் என்பதால் மத்திய அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றன.
நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணியானது நாலுகால் மண்டபம், நீலா தெற்குவீதி, கீழவீதி, அபிராமி அம்மன் திருவாசல், மருத்துவமனை சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்அடங்கிய பதாகைகள் மற்றும் 650 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தி பேரணியாக வந்தனா். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆா்.சி., என்.பி.ஆா். திட்டங்களுக்கு எதிராக முழக்கமிடப்பட்டன.
கண்டன ஆா்ப்பாட்டம்: பேரணி நிறைவு பெற்றதும், நாகை அவுரித் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக் குழுவைச் சோ்ந்த நிஜாமுதீன் தலைமை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு, கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் உ. மதிவாணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி, திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டன. மேலும், செல்லிடப் பேசிகளை ஒளிரச் செய்து, எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நாகை நகராட்சி முன்னாள் தலைவா் மஞ்சுளா சந்திரமோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கதிா்நிலவன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளா் முபாரக்அலி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் செய்யது அனஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பெண்கள், சிறாா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா். போராட்டக் குழுவைச் சோ்ந்த ஹாஜாஅல்லா நன்றி கூறினாா்.