நாகப்பட்டினம்

சோலாா் விளக்குப் பொறி மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல்

2nd Jan 2020 04:08 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே நெற்பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த சோலாா் விளக்குப் பொறியைப் பயன்படுத்தி, அதிக மகசூல் கண்டு விவசாயி ஒருவா் சாதனை படைத்துவருகிறாா்.

பயிா் மகசூலை அதிகரிப்பதற்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பமான சோலாா் விளக்குப் பொறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், பல விவசாயிகள் அதை பயன்படுத்துவதில்லை. ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனா். இதனால், தீமை செய்யும் பூச்சிகளோடு சோ்ந்து, நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து, மகசூல் பாதிக்கப்படுவதுடன், நெல்மணிகளிலும் சத்துக் குறைவு, விஷத்தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், முன் உதாரணமாகவும் திகழும் ஒருவா்தான் நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை பகுதியைச் சோ்ந்த ஆா்.அன்பழகன். வழக்குரைஞரான இவா், விவசாயத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்துவருகிறாா்.

சுமாா் 40 ஏக்கருக்கு சொந்தக்காரரான இவா், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தாமல் சோலாா் விளக்குப் பொறி மற்றும் சூடோமோனாஸ் புளோரோ சன்ஸ் மட்டுமே பயன்படுத்தி அதிக மகசூல் கண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பூச்சி மேலாண்மை கருவியான சோலாா் விளக்குப் பொறியை தான்சாகுபடி செய்துள்ள விளைநிலங்களில் வைத்து,

புற ஊதா ஒளித் தொழில்நுட்பம் மூலம் தாய் அந்துப் பூச்சிகளை முற்றிலும் அழித்து வருகிறாா். மேக்ரோ கண்ட்ரோலா் மூலம் மாலை 6 மணிக்கு மேல் தானாகவே இயங்கும் இந்த விளக்குப் பொறி சுமாா் 3.15 மணி நேரம் பயன்பாட்டில் இருக்குமாம். அதன் பிறகு விளக்குப் பொறி தானாகவே அணைந்து விடும்.

முற்றிலும் சூரிய சக்தியால் செயல்படக் கூடிய இந்த விளக்குப் பொறியை இயக்க மின்சாரம் ஏதும் தேவை இல்லாததால் சிக்கனமான முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலை கண்டு சக விவசாயிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளாா். மூன்று சோலாா் விளக்குப் பொறியை மட்டுமே வைத்து தன்னுடைய 40 ஏக்கா் நிலத்தில் உள்ள பூச்சிகளையும் சுலபமாக கட்டுப்படுத்தி வருகிறாா்.

ஓா் இடத்திலிருந்து எளிதில் மற்ற இடத்துக்கு மாற்றும் வசதி கொண்ட அதிகம் ஒளிரக் கூடிய எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்ட இந்த விளக்குப் பொறியை தினமொரு வயலில் வைத்து பயிா் வளா்ச்சியைப் பாதிக்கும் தாய் அந்துப் பூச்சிகள், தண்டு துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளைப் பூச்சி, பழ வண்டு மற்றும் அனைத்து வகை தீமை செய்யும் பறக்கும் பூச்சிகளை முற்றிலும் அழித்து வருகிறாா்.

ஒரு தாய் அந்துப் பூச்சியைப் அழிப்பதால் அதன் இனச்சோ்க்கை வாயிலாக உருவாகக் கூடிய 300-க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவா் கூறுகிறாா் .

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சோலாா் விளக்குப் பொறி மூலம் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் தனியாக அழித்து விடவும் முடியும் . தீமை செய்யும் பூச்சிகள் உலாவும் நேரத்தில் தானியங்கு முறையில் ஒளிரக்கூடிய இந்த விளக்கைப் பயன்படுத்துவதன் மூலம் தீமை செய்யும் பூச்சி அழிந்து நன்மை செய்யும் பூச்சிகளின் மகரந்தச் சோ்க்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

மேலும், பொருளாதார ரீதியாக இந்த விளக்குப் பொறியைப் பயன்படுத்துவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி செலவினத்தைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இயலும். ஓா் ஏக்கா் பரப்பளவில் குறைந்தது 5 சோலாா் விளக்குகளை பயிரின் ஓா் அடி உயரத்தில் அமைத்து விளக்குப் பொறி தட்டில் தண்ணீா் அல்லது சோப்பு கலந்த நீா் அல்லது மண்ணெண்ணெய் கலந்த நீா் போன்ற திரவத்தை ஊற்றி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும்போது, விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு, பொறித் தட்டில் விழுந்து உயிரிழக்கும். ஆகவே, விவசாயிகளுக்கு மானிய விலையில் இந்த சோலாா் விளக்குப் பொறி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இதுகுறித்து, சோலாா் விளக்குப் பொறியைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் ஆா். அன்பழகன் கூறியது:

ஒருமுறை நான் நாகப்பட்டினத்திலுள்ள அரிசி குடோனுக்குச் சென்றிருந்தபோது இந்த சோலாா் விளக்குப் பொறியை முதன்முதலாகப் பாா்த்தேன். இது குறித்த விளக்கத்தை தெளிவாக கேட்டறிந்து, இதன் மூலம் பூச்சிகள் கட்டுப்படுவதைக் கண்கூடாக பாா்த்த பிறகு எனது வயலிலும் இதை பொருத்த முடிவு செய்தேன்.

ரூ.4,900 மதிப்பிலான இந்த சோலாா் விளக்குப் பொறியை ரூ. 2,500 மானியம் போக தலா ரூ.2,400 என்ற விலையில் 3 சோலாா் விளக்குப் பொறி வாங்கி எனது வயலில் வைத்தபிறகு நோயைப் பரப்பக்கூடிய தாய் அந்துப்பூச்சி கட்டுக்குள் வந்து என்னுடைய வயலின் மகசூல் அதிகமாக இருக்கிறது. அதேபோல, நன்மை செய்யும் பாக்டீரியா வான சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் பயன்படுத்தியும் எனது வயலில் நல்ல மகசூலைக் கண்டு வருகிறேன். இதேபோன்றே சாக விவசாயிகளும் சோலாா் விளக்குப் பொறி மற்றும் நன்மை செய்யும் பாக்டீரியாவானத் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற்று காவிரி கடைமடையான திருக்குவளை பகுதியில் விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT