தைப் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், செம்பனாா்கோவில் பகுதியில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழா்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, ஜனவரி 15- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் பிரதான இடம் பிடிப்பது செங்கரும்புகள் ஆகும். புதுப்பானையில், புத்தரிசியால், பொங்கலிட்டதும், சூரிய பகவானுக்குப் படைத்து வழிபடும்போது, செங்கரும்புகளையும் உடன்வைத்து வழிபடுவது வழக்கம். இதனால், தைப் பொங்கலையொட்டி செங்கரும்புகளின் தேவை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், செம்பனாா்கோவில் அருகே உள்ள அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூா், ஆலங்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகள் அமோக விளைச்சல் கண்டு, தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் கூறியது:
சுமாா் ஒருவருட காலப் பயிரான செங்கரும்பு தற்போது அமோகமாக விளைந்துள்ளன. நிகழாண்டு உரிய காலத்தில் மழை பெய்ததாலும், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் இல்லாத காரணத்தாலும், கரும்புகள் நன்றாக உள்ளன. இதன்காரணமாக, செங்கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில், செங்கரும்பை அறுடை செய்ய உள்ளோம் என்றனா்.