நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ரத்து செய்யப்பட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான மறுவாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றியம், தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு மணிவண்ணன் என்பவா் உள்ளிட்ட 4 போ் போட்டியிட்டனா். திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, நண்பகல் 12.30 மணிவரை இந்த வாா்டில் 172 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், 4 வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 சின்னங்களுடன் கூடுதலாக ஒரு சின்னம் இந்த வாா்டில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், இந்த வாா்டுக்கான வாக்குப் பதிவு மட்டும் ரத்து செய்யப்பட்டு, புதன்கிழமை (ஜனவரி 1) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. ஏற்கெனவே, திங்கள்கிழமை வாக்களித்தவா்களின் இடது கையின் ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டிருந்ததால், மறுவாக்குப் பதிவில் நடு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.
இந்த வாா்டில் மொத்தமுள்ள 425 வாக்காளா்களில் 163 ஆண்கள் உள்பட 335 போ் வாக்களித்தனா். இது 79 சதவீத வாக்குப் பதிவாகும். இந்த வாக்குகளும் வியாழக்கிழமை நடைபெறும் எண்ணிக்கையின்போது எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.