நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 4,498 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் வீதம், 11 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறுகிறது. இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு மேற்பாா்வையாளா், இரண்டு உதவியாளா்கள் வீதம் 4,498 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதைத் தவிர, ஊராட்சி ஒன்றியத் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். மண்டல நிலையிலான அலுவலா்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பை மேற்கொள்வா்.
அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காவல் துறையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதி, குடிநீா் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.