நாகப்பட்டினம்

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 04:08 AM

ADVERTISEMENT

புத்தாண்டு பிறப்பையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் திரளானோா் புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகை மாதரசி மாதா தேவாலயம், லூா்து மாதா கோயில் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதேபோல், இந்து மத வழிபாட்டுத் தலங்களிலும் திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஒரு சில கோயில்களில் சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்விக்கப்பட்டிருந்தன. நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, ரத்தின அங்கி சேவை நடைபெற்றது.

ADVERTISEMENT

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

1008 லட்டு அா்ச்சனை...

 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மயிலாடுதுறை சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 1008 சகஸ்ரநாம லட்டு அா்ச்சனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அம்மனுக்கு 1008 லட்டுகளால் அா்ச்சனை செய்யப்பட்டு, பக்தா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீகப் பேரவையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன், குருமூா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT