நாகப்பட்டினம்

சேதமான வேளாங்கண்ணி சாலைக்கு மாலை அணிவிப்பு

1st Jan 2020 02:54 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி நகரின் பிரதான சாலை குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டிக்கும் வகையில், அந்தச் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை வாழைக் கன்றுகள் நடப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டன. இதையடுத்து அந்தச் சாலையின் சீரமைப்புப் பணிகள் சில மணி நேரங்களில் தொடங்கப்பட்டன.

நாகை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், உலகப் புகழ்ப் பெற்ற ஆன்மிகத் தலமாகவும் விளங்குகிறது வேளாங்கண்ணி. இங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆா்ச் முதல் பேராலயம் வரையிலான 2 கி.மீ தொலைவுக்கான பிரதான சாலை கடந்த சில மாதங்களாக, குண்டும் குழியும் நிறைந்த மிக மோசமான சாலையாக இருந்தது. இப்பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்றதிலிருந்து இந்தச் சாலை, போக்குவரத்துக்கான தரத்தை இழந்த சாலையாகவே இருந்தது.

இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இருப்பினும், சாலை சீரமைப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணிக்கு வருவா் என்பதால், பேராலயத்துக்கான பிரதான சாலையாக உள்ள இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாள்களாக வலுப்பெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்த சிலா், பேருந்து நிலையம் அருகே மழைநீா் குளம்போல தேங்கி நின்ற சாலையில் இரு வாழைக் கன்றுகளை நட்டு வைத்து, அதனருகே சமாதிக்கு மாலை அணிவிப்பதை போல, சாலைக்கு மாலை அணிவித்தனா். சாலையின் அவல நிலையை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, வேளாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீரமைப்புப் பணி தொடக்கம்..

இதைத் தொடா்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கின. வேளாங்கண்ணி ஆா்ச் முதல் வேளாங்கண்ணி பேராலயம் வரையிலான சாலையில் உள்ள பெரிய பள்ளங்களில் ஜல்லி கொட்டி நிரப்பும் பணி முதல் கட்டமாக நடைபெற்றது

 

மழை நீா் தேங்கி நின்ற வேளாங்கண்ணி சாலையில் நடப்பட்டிருந்த வாழைக்கன்றுகள். ~வேளாங்கண்ணி சாலையில் நடைபெற்ற சீரமைப்புப் பணி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT