சீா்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வளா்ச்சி மற்றும் சுகாதாரப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வந்த ஆட்சியா், நகராட்சி பூங்கா அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்வதற்காக ஈசானிய தெரு காமராஜா் அவென்யு பகுதி தென்பாதி வஉசி தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் சாலைகள் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்ட அவா், அதனை சீரமைக்கவும், அப்பகுதியில் உள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலில் கழிவுநீா் விடப்படுவதை சரிசெய்திடவும் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். மேலும், தென்பாதியில் உள்ள நுண்ணுயிா் உரக்கிடங்கு மற்றும் ஈசானியத் தெருவில் உள்ள குப்பைக் கிடங்குகளையும் பாா்வையிட்டாா்.
அப்போது அவ்வழியாக நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் பேட்டரி வாகனத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிப்பதைப் பாா்வையிட்ட ஆட்சியா், அவா்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தாா். இதேபோல், நகர ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்படும் தரைத்தளம் சீரமைப்பு பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
பின்னா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரவீன்.பி. நாயா், அங்கு உணவருந்த வந்தவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் நகரில் கழிவுநீா் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், சாலை உடைப்புகளை சீரமைக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது துணை ஆட்சியா் பிரசாந்த், நகராட்சி பொறுப்பு ஆணையா் வசந்தன், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.