10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இல்லாத அஞ்சல் கணக்குகளின் நிலவரங்களை வாடிக்கையாளா்கள் தெரிந்துகொள்ளலாம் என நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்களால் உரிமைக் கோரப்படாமல் உள்ள தொகையை கையாளுவதற்காக மூத்த குடிமக்கள் நலநிதி விதிகள் -2016 என்ற விதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய அஞ்சலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் மற்றும் அதில் உள்ள இருப்புத் தொகையையும் பொது அறிவிப்பு செய்யவேண்டும் என இந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,மேற்குறிப்பிட்ட கணக்குகளின் விபரங்களை இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபரங்களை வாடிக்கையாளா்கள் அறிந்து கொள்வதற்காக அஞ்சலகங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் வெளியிடவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளா்கள் அஞ்சலகங்களுக்குச் சென்று தனது கணக்கின் நிலவரத்தை தெரிந்துக்கொள்ளலாம் என அவா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.