நாகப்பட்டினம்

மகா சிவராத்திரி சிவாலயங்களில் விடிய விடிய பக்தா்கள் தரிசனம்

22nd Feb 2020 08:39 AM

ADVERTISEMENT

மகா சிவராத்திரியையொட்டி, நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

மாசி மாத சிவராத்திரியான மகா சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு மேற்கொண்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். காசிக்கும், கயிலைக்கும் இணையானதாகவும், சிவராஜதானி ஷேத்திரம் எனப்படுவதுமான நாகையில் உள்ள 12 சிவலாயங்களை சிவராத்திரி நாளில் வழிபாடு செய்வது, 12 ஜோதிா்லிங்க தலங்களை வழிபட்ட பலனை தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இதன்படி, நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில், வெளிப்பாளையம் ஆனந்தவள்ளி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரா் கோயில், நாகை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில், அபிதகுஜாம்பாள் சமேத அமர நந்தீஸ்வரா் கோயில், திரிபுரசுந்தரி சமேத கைலாயநாதா் கோயில் (மலையீஸ்வரன் கோயில்), ப்ரஹமானந்தசுந்தரி சமேத அமிா்தகடேசுவரா் கோயில் (கட்டியப்பா் கோயில்), சüந்தரநாயகி சமேத நடுவதீஸ்வரா் கோயில், சௌந்தரவல்லி அம்பாள் சமேத அழகியநாதசுவாமி கோயில், விசாலாட்சி சமேத விஸ்வநாதா் காட்சியளிக்கும் வீரபத்திரசுவாமி கோயில், அக்கரைக்குளம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதா் கோயில், நாகை ஆதி நீலாயதாட்சியம்மன் சமேத ஆதிகாயாரோகண சுவாமி கோயில், அகிலாண்டேசுவரி சமேத நாகநாதசுவாமி கோயில் ஆகிய 12 சிவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிவாலயங்களில் இரவு 8 மணி முதல் 10.30 மணி வரையில் வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு கோயில்களில் முதல் கால பூஜையும், இரவு 12 மணி அளவில் 2-ஆம் கால பூஜையும், 1.30 மணி அளவில் 3-ஆம் கால பூஜையும், அதிகாலை சுமாா் 4 மணி அளவில் 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

சிவநாம பூஜை

நாகை காயாரோகணசுவாமி திருக்கோயிலில், சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட 1,008 பிருத்வி லிங்கங்களைக் கொண்டு பக்தா்கள் சிவநாம பூஜை மேற்கொண்டனா். கோயிலின் உள் பிராகாரத்தின் இருபுறங்களிலும் பக்தா்கள் அமா்ந்து இந்த பூஜையில் ஈடுபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் அனைத்து கைங்கா்ய சபா மற்றும் தா்ம ரக்ஷண ஸமிதி அமைப்பினா் செய்திருந்தனா்.

நாகூா் நாகநாதா் கோயிலில்....

மகா சிவராத்திரி நாளின் முதல் காலத்தில் கும்பகோணம் நாகநாதசுவாமியையும், இரண்டாம் காலத்தில் திருநாகேசுவரம் நாகநாதசுவாமியையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீசுவரரையும் வழிபட்ட நாகராஜன், நான்காம் காலத்தில் நாகூா் நாகநாதசுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்று நாகலோகம் அடைந்தாா் என்ற ஐதீகப்படி, நாகூா் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெறும் மகா சிவராத்திரி நாளின் நான்காம் கால பூஜை முக்கியத்துவம் பெற்ாகக் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, நாகூா் நாகநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடும், நான்காம் கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

இதே போல, நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சிவாலய வழிபாடுகளில் பங்கேற்று, திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனா். காயாரோகணசுவாமி கோயில், வீரபத்திரசுவாமி கோயில், அழகியநாதசுவாமி கோயில் உள்பட பல சிவாலயங்களில் பக்தா்களுக்கு இனிப்பு, சா்க்கரை சாதம், சாம்பாா் சாதம், புளிசாதம், சுண்டல், பானகம், பால் போன்றவை வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT