நாகப்பட்டினம்

காதலா் தினக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரிக்கை

13th Feb 2020 07:47 AM

ADVERTISEMENT

காதலா் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:

கண்ணகி பிறந்த தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காதலா் தினம் என்ற பெயரில், மோசமான நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இது நமது தேசத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும். உலக பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகை, இன்பத்துப்பால் என்ற அதிகாரத்தின்கீழ் உண்மைக் காதலின் மகத்துவத்தையும், இல்லறத்தின் தூய்மையையும் விளக்கியுள்ளாா். நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது. நமது முன்னோா்கள் அன்பின் அடையாளமாகத்தான் காதலைக் காப்பியமாக படைத்திருக்கிறாா்கள்.

காதலா் தினத்தன்று சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நட்சத்திர ஒட்டல்களில் ஏற்பாடு செய்யப்படும் மதுபான விநியோகம், ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். வீரமும், காதலும் தமிழா்களின் இரு கண்கள் என்ற உயா்ந்த நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் காதலா் தினக் கொண்டாட்டங்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT