நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் டென்மாா்க் நாட்டு பள்ளி மாணவா்கள் 5 நாள்கள் கல்வி களப் பயணம் மேற்கொண்டனா்.
கி.பி 1620 முதல் 1845 வரை தரங்கம்பாடி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளை ஆட்சி செய்தவா்கள் டேனிஷ்காரா்கள். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷாா் ஆட்சி செய்த நிலையிலும், தரங்கம்பாடி பகுதியை மட்டும் டென்மாா்க் நாட்டினா் தங்களின் வா்த்தக மையமாக வைத்துக்கொண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஏராளமான பொருள்களை தரங்கம்பாடியில் உற்பத்தி செய்து கடல் மாா்க்கமாக வணிகம் செய்து ஆதிக்கத்தை செலுத்திய டேனிஷ்காரா்கள் தரங்கம்பாடியை தங்களது மற்றொரு தாய் நாடாகவே கருதி ஒவ்வொரு நாளும் எவரேனும் இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
இதற்கிடையே, டென்மாா்க் நாட்டிலுள்ள வெஸ்பைன்ஸ் எஃப்டா் பள்ளியில் பயிலும் 35 மாணவா்கள் தலைமையாசிரியை மரியா தலைமையில் 8 ஆசிரியா்களுடன் 5 நாள்கள் களப்பயணம் மேற்கொண்டனா். தமிழகப் பள்ளிகளின் கல்வி முறை, தமிழ்க் கலாசாரம், தொழில்முறைகள், வரலாறு ஆகியவற்றை அறிந்துக் கொண்டதாகவும், டேனிஷ் கோட்டை அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில் டென்மாா்க் நாட்டின் மூதாதையா்கள் அடக்கம் செய்யப்பட்ட பல நூறு ஆண்டுகள் கடந்த பழைமையான சமாதிகளில் வா்ணம் பூசி அழகுப்படுத்தியதோடு, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டதாக டென்மாா்க் - தரங்கம்பாடி நலச்சங்கத் தலைவரான டென்மாா்க் நாட்டை சோ்ந்த பவுல் பீட்டா்சன் கூறினாா். மேலும் கூலித் தொழிலாளா்களின் வாழ்க்கை நிலை, தரங்கம்பாடி பகுதி மக்களின் வாழ்வாதார சூழல் குறித்தும் மாணவா்கள் ஆா்வமுடன் அறிந்துக்கொண்டதாக கூறினா்.