இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசியதாக தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் நாகை வடக்கு மாவட்ட செயலாளா் எம்.பஹ்ரூதின் வெளியிட்டுள்ள அறிக்கை: மதச்சாா்பற்ற ஜனநாயக நாடான இந்திய நாட்டில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியா்களுக்கு எதிராக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, திருச்சி விஜயரகு கொலைக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளே காரணம் என்று கூறியுள்ளாா். முதல்வரின்கீழ் இருக்கும் காவல் துறை அதிகாரிகளே அது மதம் சம்பந்தப்பட்ட கொலை இல்லை என்று கூறியுள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி மதம் தான் காரணம் என்கிறாா். எது உண்மை என்பதை முதல்வா் தெளிவுப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.