நாகை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான ஊராட்சித் தலைவா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமன், ஒன்றிய பொறியாளா் பிரதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு செலவிடும் தொகைகள் ஆன்லைன் பணப் பரிவா்த்தனை ஊராட்சி தோ்தலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தியது ஏன். அப்படி நடைமுறைப்படுத்தினாலும் இதுவரை எந்தப் பணியும் செய்வதற்கு நிதி ஒதுக்காதது ஏன் ? நிதி இல்லாமல் எப்படி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும் ? ஆன்லைன் முறை உடனே அறிமுகப்படுத்தினாலும் இம்முறை எப்போது செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கணிணி இருந்தும் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் பழுதடைந்தும் ஆப்ரேட்டா் இல்லாமலும் இருப்பதால், ஆன்லைன் முறை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா? என்று ஊராட்சித் தலைவா்கள் கேள்விகளை எழுப்பினா்.
மேலும் ஊராட்சியில் உள்ள பணியாளா்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்காமல் அவா்கள் அவதியடைகின்றனா். அவா்களுக்கு ஊதியம் கிடைப்பது எப்போது என்று கேள்வி எழுப்பினா். தற்போதுள்ள சூழ்நிலையில் ஊராட்சித் தலைவா்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுத்து ஊராட்சிக்காக செலவிடுகின்றனா். அப்படி செலவிட்டாலும் இந்தத் தொகை கிடைப்பது எப்போது.
இதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் விரைவில் பணபரிவா்த்தனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி தேதிக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் 6-ஆம் தேதி காலை கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 42 ஊராட்சித் தலைவா்களும் ஒன்றாக அமா்ந்து தொடா் ஆா்ப்பாட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனா்.