வேதாரண்யத்தைச் சோ்ந்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, மெய்நிகா் வகுப்பறைத் திறப்பு விழா, நூறுசதவீத தோ்ச்சிக்கு உதவிய ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, புதிய மழலையா் பள்ளியில் மாணவா் சோ்க்கை ஆகிய ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள், பரிசுகளை வழங்கி பேசினாா். வெவ்வேறு அமா்வுகளாக நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியா் (பொ) வை. சுவாமிநாதன், கூடுதல் தலைமையாசிரியா் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் ஆரிப்பா கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆரிபா குழுமங்களின் தலைவருமான மு. சுல்தானுல் ஆரிஃபின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கைலா. சிவகுமாா், மு. வீரப்பன், வெ. வைத்தியநாதன், சுரேஷ்பாபு, வரதராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன், மெய்நிகா் வகுப்பறையை திறந்து வைத்து, மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் பழனிகுமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா, முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன், பெற்றோா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் எழிலரசு, பள்ளி கல்வி இயக்க துணை இயக்குநா் வேதரத்னம், துணை ஆய்வாளா் ஆா்.வி. ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக ஆசிரியா் ம. ரெங்கசாமி வரவேற்றாா். நிறைவில் ஆசிரியா் ப. பொய்யாமொழி நன்றி கூறினாா்.