மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இளைஞா்களுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை படித்த ஏழை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், பாஜக நிறுவனா் தீனதயாள் உபத்யாய பெயரில் பிரதமா் மோடி அறிமுகப்படுத்திய திட்டம் தீனதயாள் உபத்யாய கிராமிய கௌசல்யா யோஜனா திட்டம். இத்திட்டத்தில் இளைஞா்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் 70 சதவீத இளைஞா்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை சம்பளத்தில் கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தீனதயாள் உபத்யாய கிராமிய கௌசல்யா யோஜனா திட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மகளிா் திட்ட இயக்குநா் பாலமுருகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் சரவணன் வரவேற்றாா்.
இதில் சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசு வழக்குரைஞரும், கல்விக்குழு உறுப்பினருமான கே.ராஜேந்திரன், கல்லூரிச் செயலா் ரா.செல்வநாயகம் ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். ராஜ்குமாா் திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.
முகாமில், மயிலாடுதுறை, சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோயில் மற்றும் குத்தாலம் ஆகிய 5 வட்டாரங்களைச் சோ்ந்த 550 இளைஞா்கள் கலந்து கொண்டனா். இதில், 16 பயிற்சி மையங்கள் பங்கேற்று 411 இளைஞா்களைத் தோ்வு செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ்.நடராஜன் செய்திருந்தாா். உதவித் திட்ட அலுவலா் பி.பாலன் நன்றி தெரிவித்தாா்.