நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மெல்ல மீண்டுவருகிறது உப்பு உற்பத்தி

29th Apr 2020 08:09 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி மெல்ல மீண்டு வருகிறது. எனினும் குறைந்த அளவில் மட்டும் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் உணவு உப்பு மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, பஞ்சநதிக்குளம், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பில் 2 பெரிய தனியாா் நிறுவனங்கள் உள்பட சிறு, குறு உப்பு உற்பத்தியாளா்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த பகுதியில் வீசிய கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாத நிலையில், நிகழாண்டுக்கான உப்பு உற்பத்திப் பணிகள் சுமாா் 3,500 ஏக்கா்

பரப்பளவு என்ற குறைவான பரப்பிலேயே தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் உப்பு உற்பத்திக்கு சாதகமாக அமைந்து, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக மாா்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதில் சமூக இடைவெளியை காரணம் காட்டி உப்பு உற்பத்தியில் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது சில நாள்களுக்கு தடைபட்டது.

எனினும், உப்பு அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருப்பதால், ஊரடங்கில் நிபந்தனைகளுடனான விலக்கு அளிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்து உற்பத்திப் பணியை மேற்கொள்ளவும் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் தொழிலாளா்கள் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டனா். இதனால் தற்போது உப்புத் தொழில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

ஆனால், உற்பத்தியான உப்பை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படும் லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநா்கள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதால், குறைந்த அளவில் மட்டுமே லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், உப்பு ஏற்றும் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக நாகை கோட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உப்பு உற்பத்தியாளா், தொழிலாளா்கள், வியாபாரிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தேவையான அளவு லாரிகளை அனுமதிப்பது என்றும், அதற்கு முன்னதாக லாரி ஓட்டுநா்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய சோதனை நடத்துவது, இதுவரை கரோனா நோய்த் தொற்று இல்லாத வேதாரண்யம் பகுதியில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரப்படுதவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT