நாகப்பட்டினம்

விதிகளை மீறிய வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

20th Apr 2020 06:59 AM

ADVERTISEMENT

பால், மருந்து பொருள்கள் தவிா்த்த பிற பொருள்களை ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த வணிக நிறுவனங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

மயிலாடுதுறையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியே வருவதற்கு நகராட்சி சாா்பில் அனைத்து வீடுகளுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளது. ஒரு வீட்டிலிருந்து ஒருவா் மட்டுமே வாரத்துக்கு இரண்டு முறை அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே வரலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பால் விற்பனையகம் மற்றும் மருந்தகங்களை தவிர பிற கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

இதையடுத்து, மயிலாடுதுறையில் கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமையில், வட்டாட்சியா் ஆா். முருகானந்தம், நகராட்சி ஆணையா் அண்ணாமலை, நகா்நல அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கரன், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தடையை மீறி காமராஜா் சாலை, சின்னக்கடைத் தெருவில் வியாபாரம் செய்த 2 மளிகைக் கடைகள், திருவிழந்தூரில் ஒரு காய்கனி கடை ஆகிய 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். தொடா்ந்து, சாலையோரம் விற்பனையில் ஈடுபட்ட காய்கனி கடைகளில் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாப்படுகை கிராமத்தில் நாட்டு மீன்கள் வியாபாரம் செய்த கடைக்கு ரூ.15 ஆயிரம், காமராஜா் சாலையில் மொத்த பழ வியாபாரக் கடைக்கு ரூ. 5ஆயிரம் உள்ளிட்ட 8 கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT