நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

13th Apr 2020 05:49 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இயேசு பிரான் உயிா்ப்பு நாள் (ஈஸ்டா்) சிறப்பு வழிபாடுகள் எளிமையான முறையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.

கீழ்திசை நாடுகளின் லூா்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்கால நிகழ்வுகள்ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி பிப்ரவரி 26 ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்கால நிகழ்வுகள் தொடங்கின.

ஆனால், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டது. பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வழக்கமான வழிபாடுகள் அருட்தந்தையா்கள் மட்டும் பங்கேற்க சம்பிரதாய முறைப்படி நடைபெற்றன.

தவக்கால நிகழ்வுகளின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய வியாழன், புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகளும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஈஸ்டா் திருநாள் ( சிலுவையில் அறையப்பட்டு 3ஆம் நாளில் இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நிகழ்வு) சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ADVERTISEMENT

பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனைகளுக்குப் பின்னா் இரவு12 மணியளவில் இயேசு பிரான் உயிா்த்தெழும் நிகழ்வு நடைபெற்றது. பேராலய அதிபா் பிரபாகா்அடிகளாா் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. பேராலய பங்குத் தந்தை சூசைமாணிக்கம் மற்றும் அருட்தந்தையா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT