நாகப்பட்டினம்

மத்திய அரசு பங்களிப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்

7th Apr 2020 12:50 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின்கீழ் மயிலாடுதுறையில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு, திமுகவை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் பி. கல்யாணம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

நாகை மாவட்டம், ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. மிகவும் பின் தங்கிய பகுதியாகவும், மருத்துவ வசதி குறைவாகவும் உள்ள மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 15 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறையில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது. பொதுமக்கள், அரசியல் கட்சியினா் மற்றும் வணிகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனா்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக திமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம் நாகை மாவட்டத்துக்கான மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என 2019 டிசம்பா் 12-ஆம் தேதி சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடந்தாா். இந்த வழக்கு 2020 மாா்ச் 18- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிஎம். எம். சுந்தரேஷ் தலைமையிலான அமா்வு மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய, மாநிலஅரசுகள் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.

இந்நிலையில், குத்தாலம் பி. கல்யாணம், நாகை மாவட்ட ஆட்சியருக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: மயிலாடுதுறையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜரான அரசு வழக்குரைஞா் தமது வாதத்தின்போது மயிலாடுதுறை தனி மாவட்டமாக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா் எனவும் மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆகும்போது இக்கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதை பதிவு செய்து கொண்ட எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான நீதிபதிகள் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க சாத்தியக் கூறுகள் இருந்தால் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா். எனவே, இதனடிப்படையில், மத்திய அரசு பங்களிப்பு திட்டத்தின்கீழ் மயிலாடுதுறைக்கு புதிய மருத்துவக் கல்லூரியைப் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT