நாகப்பட்டினம் : பங்குனி உத்திரத்தையொட்டி, சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா ஸ்தபன அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சிக்கல் நவநீதேசுவரசுவாமி கோயிலில் தனிச் சன்னிதிக் கொண்டு காட்சியளிப்பவா் சிங்காரவேலவா். சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப் பெருமான் சக்திவேல் பெற்றாா் என்பது ஐதீகம். இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா வேல் வாங்கும் நிகழ்வின் போது, சிங்காரவேலவரின் மேனியில் வியா்வை சுரப்பது இத்தலத்தின் ஆன்மிக அதிசயம்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தா்கள் வருகையின்றி பங்குனி உத்திர விழா பூஜைகள் திங்கள்கிழமை எளிமையாக நடைபெற்றன.
சண்முகாா்ச்சனை, 18 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் என பல்வேறு நிகழ்வுகள் இங்கு நடைபெறுவது வழக்கம். ஆனால், திங்கள்கிழமை சிங்காரவேலவருக்கு பங்குனி உத்திரப் பெருவிழா பூஜையாக சிறப்பு அபிஷேகம் மட்டும் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு சிங்காரவேலவா் சன்னிதி எதிரே யாக பூஜை நடத்தப்பட்டு, சிங்காரவேலவருக்கு மகாஸ்தபன அபிஷேகம் செய்யப்பட்டது.