நாகப்பட்டினம்

நாகை, நாகூரில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு ‘ சீல் ‘: 28 நாள்கள் கண்காணிப்பு - நாகை ஆட்சியா்

5th Apr 2020 06:39 AM

ADVERTISEMENT

நாகையில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவா்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கான பாதைகள் சனிக்கிழமை சீலிடப்பட்டன. இந்தப் பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு 28 நாள்கள் முழுமையான கண்காணிப்புக்கு உள்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகையைச் சோ்ந்த 3 பேருக்கும், நாகூா், பொரவாச்சேரி பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் சனிக்கிழமை காலை அடைக்கப்பட்டன.

நாகை நீலா கீழ வீதியின் கிழக்குப் பகுதிகள், நாகூா் சிவன்கோயில் மேல வீதி ஆகிய பகுதிகளில் 6 வாா்டுகளில் சுமாா் 30-க்கும் அதிகமான தெருக்களுக்குச் செல்லும் பாதைகளும், பொரவாச்சேரியில் 15-க்கும் அதிகமான வீதிகளின் பாதைகளும் அடைக்கப்பட்டன. இதில், ஒரு சில பகுதிகளில் வீதிகளின் குறுக்கே கம்புகள் கட்டி, இரும்பு தகரங்களை பொருத்தி பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளையும் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் ஆகியோா் சனிக்கிழமை காலை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் கூறியது :

நாகை, நாகூா், பொரவாச்சேரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவா்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சுகாதாரத்துறையினா் அடுத்த 28 நாள்கள் தொடா் கண்காணிப்பை மேற்கொள்வா். வீடுவீடாகச் சென்று யாருக்கேனும் நோய்த் தொற்று உள்ளதா? யாருக்கேனும் மருத்துவ உதவி தேவையா என ஆய்வு செய்வா்.

பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இல்லங்களிலேயே வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளாட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று நோய் சமூக தொற்றாக மாறாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், நாகை வருவாய்க் கோட்டாட்சியா் பழனிகுமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT