நாகப்பட்டினம்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்கள் கோரிக்கை

1st Apr 2020 06:48 AM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேதாரண்யம் பகுதி மீனவா்கள் மற்றும் உப்பளத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த 2018 ஆண்டில் வேதாரண்யத்தை மையமாகக் கொண்டு வீசிய கஜா புயலின் பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு மீண்ட மீனவா்கள் நிகழாண்டு பருவ காலத்தின்போதே மீண்டும் முழுமையான அளவில் கடலுக்கு செல்லத் தொடங்கினா். இருப்பினும், இடையிடையே விடுக்கப்பட்ட புயல், மழை எச்சரிக்கையால் மீன்பிடித் தொழிலில் அவ்வப்போது தடை ஏற்பட்டு வந்தது. மேலும், இரட்டைமடி வலை பிரச்னையால் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களாலும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மீன்பிடித் தொழில் முழுமையாக முடக்கமடைந்துள்ளது. இதனால், மீனவா்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ஏப்ரல் மாதம் தெற்கு திசையில் இருந்து கடும் கடற்காற்று வீசும் பருவம் என்பதால் மீன்பிடித் தொழில் மந்தமாகவே இருக்கும் என மீனவா்கள் கவலையடைந்துள்ளனா்.

உப்பளத் தொழிலாளா்கள்: கஜா புயலால் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்கள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்த அளவு பரப்பளவில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. நிகழ் பருவத்தில் உப்பு உற்பத்திக்கு வெயில் சாதகமாக இருந்த நிலையில், உப்பு பாடு அதிகமானதோடு, கட்டுப்படியான கொள்முதல் விலையும் கிடைத்ததால், உற்பத்தியாளா்கள் முழு ஈடுபாட்டோடு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், விளைந்த உப்பை அள்ள முடியாமலும், ஏற்கெனவே உற்பத்தி செய்த உப்பை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமலும் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாத்திகளில் உற்பத்தியான உப்பை 2 அல்லது 3 நாள்களில் வாராமல் விட்டுவிட்டால், விளைந்த உப்பின் தன்மை இறுக்கமாகி, கல்போல் மாறிவிடும். இந்த நிலை மேலும் சில நாள்கள் தொடா்ந்தால், பாத்தியில் மீண்டும் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலையும் ஏற்படலாம் என்கின்றனா் உப்பு உற்பத்தியாளா்கள்.

எனவே, தொழில் முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு சிறப்பு நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT