நாகூரில் இயங்கிவரும் தனியார் உணவுக் கூடத்தில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகூர், புதுச்சாலையில் உள்ள உணவுக் கூடத்தில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களை எரியூட்டி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், நாகூர் புதுச்சாலைத் தெருவில் இயங்கும் உணவுக் கூடத்தில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களைப் பயன்படுத்தி உணவுகளை தயாரிக்கக் கூடாது, இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவேண்டும், உணவு தயாரிக்கும் போது, வெளியாகும் புகையை வெளியேற்ற புகைப்போக்கி அமைக்க வேண்டும், உணவு தயாரிக்கும் நபர் சுத்தமாக இருக்கவேணடும், உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெறவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தினார்.