நாகப்பட்டினம்

கோஷ்டி மோதலில் வீடு தீவைத்து எரிப்பு

22nd Sep 2019 04:11 AM

ADVERTISEMENT


நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. 
திருக்கடையூர் அருகே உள்ள சிங்கனோடை பாரதியார் தெருவைச் சேர்ந்த பாலு (56) என்பவரது மகன் பிரசாந்த் (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிவண்ணன் (21) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது.
அப்போது, மணிவண்ணனுக்கு ஆதரவாக இன்பவேல் (21), ராஜவேல் (22) ஆகியோர் பிரசாந்திடம் தகராறு செய்தனராம். 
இதையறிந்த பிரசாந்தின் தந்தை பாலு நிகழ்விடத்துக்கு வந்து தட்டிக்கேட்டபோது, அவரை, ராஜவேலும், இன்பவேலும் சேர்ந்து தாக்கினராம். 
இதனால், ஆத்திரமடைந்த பாலு தரப்பினர், மணிவண்ணன் தரப்பைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் சீனிவாசன் என்பவரது கூரைவீட்டை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில், வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.   இதுகுறித்து, பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT