நாகை மாவட்டத்தில், கடலோர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள 70 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு, கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் கே. வண்ணியப்பெருமாள், காவல்துறை துணைத் தலைவர் பவானீஸ்வரி ஆகியோரது அறிவுறுத்தலின்படி, கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி மேற்பார்வையில், தமிழ்நாடு முழுவதும், கடலோர பாதுகாப்புக் குழும தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தன்னார்வலர்கள், கடற்கரை ரோந்துப் பணி, தீவிரவாத ஊடுருவல் , கடத்தல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுபவர்களை மீட்கும் பணி மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும அதிநவீன படகுகள் மற்றும் ஏ.டி.வி. வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் நாகை, கீழையூர்,வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் ஆகிய 7 கடற்கரை காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக ஒரு காவல் நிலையத்துக்கு 10 நபர்கள் வீதம் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் பி.ராஜா பங்கேற்று, அடையாள அட்டை மற்றும் சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ஜார்ஜ் மற்றும் போலீஸார்
கலந்துகொண்டனர்.