நாகை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.
வடதமிழகம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், தமிழகத்தின் சில இடங்களில் செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் சுமார் 4 மணி அளவில் அரைமணி நேரம் நல்ல மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை நேரத்தில் அவ்வப்போது குளிர்க்காற்று வீசியது. பின்னர், இரவு சுமார் 8.40 மணி அளவில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை, இரவு சுமார் 9.30 மணி வரை நீடித்தது. அதன்பின்னர், லேசான சாரல் மழை தொடர்ந்தது.