அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வர முடியும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் மேலவீதியில் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பேசியது: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா தமிழ்மொழிக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் எண்ணற்றப் பணிகளை செய்துள்ளார். கடந்த காலங்களில் அண்ணா மாட்டுவண்டியில் சென்று மூலை முடுக்கெல்லாம் தனது நாவன்மையால் தமிழை வளர்த்தார். தொடர்ந்து ஆட்சிபுரிந்த காங்கிரஸை புறந்தள்ளி திராவிட கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தவர் அறிஞர் அண்ணா. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வரமுடியும். ஆனால், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின் ஆகியோர்தான் பதவிக்கு வரமுடியும்.
சாதாரண திமுக தொண்டரால் ஒருபோதும் முதல்வராக முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி திமுக வெற்றி பெற்றுவிட்டது. தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தரக்குறைவாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் வகையில், ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்து வருகிறார் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். கூட்டத்துக்கு, மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும், எம்எல்ஏவுமான பி.வி. பாரதி தலைமை வகித்தார்.