தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்: கடலோர கிராமங்களில் திக்.. திக்..!

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் மற்றும் சிதிலமடைந்துள்ள மின்கம்பங்களால்
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்: கடலோர கிராமங்களில் திக்.. திக்..!



நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் மற்றும் சிதிலமடைந்துள்ள மின்கம்பங்களால் ஆபத்து ஏற்படும் என்பதால் கடலோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
2018-ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரத்தை இழந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் இதுவரை பாதிப்பிலிருந்து மீள முடியாத  துயரிலேயே இருந்து வருகின்றனர். புயலால் பாதித்த பகுதிகளில் அரசும், தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு மீட்புப் பணிகளை செய்தபோதும், அப்பணிகள் முழுமையடையவில்லை என்பதுதான் தற்போதைய நிலையாகவும் இருந்து வருகிறது.
கஜா புயலின் கண் பகுதி கரையைக் கடந்த நாகை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்மாற்றிகள், 100-க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் சேதமடைந்தன. இதனால், நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிப்புக்குள்ளானது. இதையடுத்து தமிழக அரசு மற்றும் மின்வாரிய அலுவலர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சி, மின்துறை ஊழியர்களின் கடின உழைப்பால் மின்பாதைகள் சீரமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நாகை சுற்றியுள்ள நாகூர், சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், ஆரிய நாட்டுத்தெரு, நாகை தோணித்துறை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட, சாய்ந்த மின்கம்பங்கள் இதுவரை சரி செய்யாமல் இருந்து வருகிறது. இதேபோல் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் பெரும்பாலனவை சிதிலமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ளன. 
மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதால், மின்கம்பிகளுக்குள் உராய்வு ஏற்பட்டு மின் விபத்துகளும் நேரிடுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் மின் ஊழியர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  
இதேபோல், நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கீச்சாங்குப்பத்தில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மின்கம்பிகள் ஒன்றோடொன்று இணைந்து உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் உருவாகி, அப்பகுதிகளில் உள்ள குடிசைகள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், புயாலால் பாதிக்கப்பட்ட மின்மாற்றிகள் இதுவரை சரி செய்யாததால் இக்கிராமத்தில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்புக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கஜா புயல் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மின்கம்பங்களை சீர்படுத்தவும், மின் பாதைகளை சரி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் கூறியது: நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம், பேட்டை, கல்லார் ஆகிய பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நாகை நகராட்சியையொட்டியுள்ள அக்கரைப்பேட்டையில் தமிழகத்தின் சிறந்த மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்துக்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் வந்து  செல்கின்றன.
மீன்பிடித் தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியைப் நாட்டுக்குப் பெற்றுத்தரும் பகுதியாக அக்கரைப்பேட்டை இருந்து வருகிறது. இப்பகுதி படகு கட்டும் இடமாகவும் இருக்கிறது. இந்நிலையில், கஜா புயலால்  பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மீட்புப் பணிகள் இதுவரை முழுமையாக முடிக்காமல் உள்ளது. குறிப்பாக புயல் சீற்றத்தால் சாய்ந்த 200-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் இதுவரை சரி செய்யப்படவில்லை.
பயன்பாட்டில் உள்ள மின் கம்பங்களின் கீழ் மற்றும் மேல் பகுதிகள் சிதிலமடைந்து கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரியம் அலுவலர்களுக்கு புகார்  தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பருவ மழை காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். காற்றின் வேகத்தால் சிதிலமடைந்துள்ள மின் கம்பங்கள் சாய்ந்து  விழுந்து பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதையெல்லம் கவனத்தில் கொண்டு அக்கரைப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கடலோர கிராமங்களில் சிதிலமடைந்து காணப்படும் மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறியது: கடலோர கிராமங்களில் வீசும் உப்புக் கலந்த கடல் காற்று காரணமாக குறுகிய காலத்துக்குள் மின் கம்பங்கள் பலமிழந்துவிடுகின்றன. மின்கம்பங்கள் தொடர்ந்து அசைவதால் அதிலுள்ள கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகின்றன. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கான முயற்சிகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. கீச்சாங்குப்பம் கிராமத்தில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் குறித்து அளவீடு  செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com