நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் பேருந்துகளை நிறுத்த புதிய நெறிமுறை

7th Sep 2019 07:27 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை முதல் புதிய நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் வளாகம் முன்பு தடுப்புச் சுவருக்குள்ளும், தடுப்புக்கு பக்கவாட்டில் பொது பயன்பாட்டுக்கான சாலையாகவும் இருந்து வந்தது. இதனால், குறுகிய இடத்துக்குள்ளேயே பேருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்திச் செல்லும் முறை நீடித்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம் தொடங்கியதால் அப்போது, வீதிகள் சீரமைக்கப்பட்டு, பேருந்து நிலைய பக்கவாட்டில் இருந்த தடுப்புச் சுவர் அகற்றப்பட்டது. பக்கவாட்டு சாலையும் இணைக்கப்பட்டதால், பேருந்து நிறுத்தும் வளாகம் அகலமடைந்தது. இந்த நிலையிலும் பேருந்துகள் வழக்கம்போலவே நிறுத்தப்பட்டு வந்தன. இதனிடையே, அண்மையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து காவல் நிலையம் எதிரே அமைந்த பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அருகேயிருந்த அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பேருந்து நிலைய வளாகம் பாதுகாப்பு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கண்காணிப்பை எளிமையாக்கவும், பயணிகளின் வசதிகளுக்கு ஏற்பவும் பேருந்துகளை நிறுத்தி செல்வது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அறிவுறுத்தல்படி தற்போது பேருந்துகள் அனைத்தும் வடக்கு (வடக்கு வடகிழக்காக) திசை நோக்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகளிடையே வரவேற்பைப் 
பெற்றுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT