நாகப்பட்டினம்

விதிகளை மீறி மணல் அள்ளிய விவகாரம்: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

7th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

பொறையாறு அருகே காழியப்பன்நல்லூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள திடல்களில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதைக் கண்டித்து, மணல் ஏற்றிவந்த வாகனங்களை முற்றுகையிட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காழியப்பன்நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள  திடல்களில் தூர்வாருவதற்கு வெளியூரைச் சேர்ந்த சிலர் அரசின் அனுமதி பெற்று மண் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் விதிமுறையை மீறி, 10 அடிக்கு மேலாக திடலில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அதிக அளவில் மணல் எடுத்து லாரிகள் மூலம் உள்ளூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மணலைக் கடத்தி  விற்பனை  செய்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். 
இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன், குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது. மேலும் கடற்கரை அருகில் திடல் இருப்பதால், கடல்நீர் விளைநிலங்களில் புகுந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில், அரசின் விதிமுறையை மீறி, 10 அடிக்கும் மேலாக திடல்களில் மணல் எடுத்ததாக ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை விவசாய சங்கத் தலைவர் தாஸ், பொருளாளர் செல்வம் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொறையாறு காவல்துறையினர், இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT