நாகப்பட்டினம்

குடம் தண்ணீருக்காக இரவு முழுவதும் காத்திருக்கும் அவலம்!

7th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

திருக்குவளை பகுதியில் நள்ளிரவில் திறந்துவிடப்படும் குடிநீரை குடங்களில் பிடிப்பதற்காக இரவு முழுக்க கண்விழித்து காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியுள்ளனர். 
திருக்குவளையில் 1,200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதத்தினர் கூலித்தொழில், விவசாயம் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர். எஞ்சிய 20 சதவீதத்தினர் அரசுப் பணிகளில் மாதம் ஊதியம் பெறுவோர். திருக்குவளையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீரைப் பெறுவதற்கு இப்பகுதி மக்கள் அல்லல்படுகின்றனர். காரணம், இப்பகுதி மக்கள் அனைவரும் அரசு சார்பில் விநியோகிக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்தையே நம்பி இருக்கின்றனர். கீழ்வேளூர் மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீரே இப்பகுதியினரின் ஜீவாதாரமாக விளங்குகிறது. இதன் அவசியம் கருதி பலர் தெருவோரம் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதையே தங்கள் முழுநேர பணியாகக் கொண்டுள்ளனர். மேலும் திருக்குவளை, கீழ்குடி மற்றும் கீழத்தெரு பகுதிகளில் இரவு 12 மணிக்கு மேல் அதாவது நள்ளிரவு நேரத்தில்   தண்ணீர் திறந்து விடப்படுவதால் வயதானவர்களும், பெண்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். 
குறிப்பாக, இரண்டு குடம் தண்ணீர் பிடிப்பதற்காக இரவு முழுவதும் கண் விழித்து காத்திருக்க வேண்டிய அவல நிலை இப்பகுதியில் நீடிக்கிறது. இரவில் முன்கூட்டியே குழாயின் வாயிலில் குடங்களை அடுக்குவதின் அடிப்படையிலேயே தண்ணீர் பிடிப்பதில் முன்னுரிமை என்ற எழுதப்படாத விதி அமலில் இருப்பதால், பெரும்பாலும் இரவு 10 மணியளவிலேயே காலிக் குடங்களுடன் குழாயைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொள்கின்றனர்.
சில சமயங்களில் அவ்வாறு முன்கூட்டியே வருவோர்க்கு மட்டுமே குடிநீர் கிடைப்பதாகவும், தாமதமாக வருவோர் குடிநீர் இன்றி காலிக்குடங்களுடன் வீடு திரும்பும் அவலம் நிலவுவதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து திருக்குவளையைச் சேர்ந்த மூதாட்டி பார்வதி கூறியதாவது: நான் திருக்குவளை கீழத்தெருவில் வசிக்கிறேன். வயதான காலத்திலும் கூட தண்ணீருக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், காலை உணவு தயாரிக்க கூட இயலாது. காசு கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாங்குவதற்கு எங்களிடம் வசதி கிடையாது. இரவு 10 மணிக்கு குழாய் அருகில் உட்கார்ந்து, பல மணி நேரத்துக்குப் பிறகுதான் குடத்தில் தண்ணீர் பிடிப்போம். இதனால் பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்திருக்கிறோம். வயதான என்னை போன்ற பலரும் தண்ணீர் பிடிக்க வரிசையில் காத்திருக்கின்றனர். உடனடியாக இந்த பிரச்னைக்குத் தீர்வு கண்டு, பகல் நேரத்தில் தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT