நாகப்பட்டினம்

நாகூர் சீராளம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

4th Sep 2019 07:01 AM

ADVERTISEMENT

நாகூர் சீராளம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 

நாகூர் பட்டினச்சேரியில் உள்ளது அருள்மிகு சீராளம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் பிரமோத்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை பிரமோத்ஸவ விழா தொடக்கமாக, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, நாகூர் நாகநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து ஊர்வலம் நடைபெற்றது. திரளான பெண்கள் பூ தட்டுகளுடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேளதாள முழக்கங்களுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
நாகூர் கோயிலிலிருந்து, தேசிய நெடுஞ்சாலை, மியான் தெரு, ரயில்வே சப்வே வழியாக இந்த ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் நிறைவில், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பூச்சொரிதல் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோயிலின் பூச்சொரிதல் ஊர்வலப் பாதைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக, ஊர்வலத்துக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வி. வரதராஜூ மேற்பார்வையில்,  தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் 800-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

ஊர்வலப் பாதைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட பகுதியின் பல இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஊர்வலத்துக்கு முன்பாக காவல் துறையின் கண்காணிப்பு வாகனம் 
அணிவகுத்தது.   
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT