நாகப்பட்டினம்

அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

4th Sep 2019 06:58 AM

ADVERTISEMENT

அனைத்து ஜாதி மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதில் உடனடியாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு தினமும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜான்பாண்டியன், அம்பேத்கர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் கூறியது: அம்பேத்கர் தேசியத் தலைவர். அவரை ஜாதியின் அடையாளத்தோடு முத்திரைக் குத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு 12 மணி நேரத்தில் புதிய சிலை நிறுவியது வரவேற்கத்தக்கது.
அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழவேண்டும். ஒரு சிலரின் தூண்டுதலுக்கு யாரும் துணை போகக் கூடாது என்றார் அவர். முன்னதாக, வேதாரண்யம் நகரப் பகுதிக்குள்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. இமான், வழக்குரைஞர் அணி செயலாளர் சிவ. ராசேந்திரன், மண்டலச் செயலாளர் பாலை.பட்டாபிராமன், மாவட்டச் செயலாளர்கள் ஆரோக்கியசெல்வம் (திருவாரூர்), ஆர்.ஜெ. ராஜா (நாகை), ஒன்றியச் செயலாளர் ஆர். புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT