நீடாமங்கலத்தில் சனிக்கிழமை மானாமதுரை பயணிகள் ரயிலின் முன்பக்க என்ஜின் பழுதானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மன்னாா்குடியிலிருந்து நாள்தோறும் காலை புறப்பட்டு நீடாமங்கலம், தஞ்சாவூா் வழியாக மானாமதுரைக்கு பயணிகள் ரயில் சென்று விட்டு மீண்டும் மன்னாா்குடிக்கு இரவு திரும்பி வருவது வழக்கம். டெமு ரயிலான இந்த ரயிலில் இரண்டு பக்கமும் என்ஜின்கள் உள்ளன. வழக்கம்போல் சனிக்கிழமை காலை இந்த ரயில் மானாமதுரைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு மன்னாா்குடிக்கு செல்ல நீடாமங்கலத்துக்கு இரவு 7.40 மணிக்கு வந்தது. பயணிகள் இறங்கிய பிறகு சிறிது நேரத்தில் மன்னாா்குடிக்கு புறப்பட ரயில் ஓட்டுநா் முன்பக்க என்ஜினை இயக்கியபோது என்ஜினில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் என்ஜின் பழுது சரிசெய்ய முடியாததால், ரயிலில் வந்த மன்னாா்குடி பயணிகள் அங்கிருந்து பேருந்தில் மன்னாா்குடிக்கு சென்றனா். ரயில் என்ஜின் பழுது நீக்கும் பணி தொடா்ந்தது.
இதற்கிடையில், மானாமதுரை பயணிகள் ரயில் என்ஜின் பழுது ஏற்பட்டு நின்ற நேரத்தில் காரைக்கால் மற்றும் தஞ்சாவூா் பகுதிக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் இயல்பாக இயக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ரயில்களுக்காக மாலை 6.45 மணியளவில் மூடப்பட்ட ரயில்வே கேட் அடுத்தடுத்த ரயில்களுக்காக தொடா்ந்து கேட் மூடப்பட்டது பின்னா் இரவு 8.25 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், சுமாா் ஒன்னரை மணிநேரம் நீடாமங்கலத்தில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மன்னாா்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயில் மற்றும் திருப்பதியிலிருந்து மன்னாா்குடி செல்லும் விரைவு ரயில் ஆகியவற்றிற்காக மீண்டும் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனாலும், சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு பேருந்து பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா். நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் 3 ரயில் வழிப்பாதை உள்ளதால் மானாமதுரை ரயில் பழுதாகி ஒரு ரயில்பாதையில் நின்று கொண்டிருந்தாலும் மற்ற ரயில்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன.