நாகப்பட்டினம்

மயிலாடுதுறை: மல்லுக்கட்டில் வெல்வது யார்?

20th Oct 2019 06:08 AM

ADVERTISEMENT


வான்பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலையக் கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழித்த பூமி என பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணரால் அடையாளம் காட்டப்பட்ட காவிரி கடைமடை பகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி. 
நாகை மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.  
கர்நாடக மாநிலத்திலிருந்து தவழ்ந்து வந்து தமிழகத்தை வாழ்விக்கும் காவிரி, கடல் புகும் இப்பகுதியின் பிரதான தொழில்கள் விவசாயமும்,  மீன்பிடித் தொழிலும். இதற்கடுத்த நிலையில்,  நெசவுத் தொழில், பித்தளை சாமான்கள் தயாரிப்பு உள்பட பல்வேறு தொழில்களும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்கவைகளாக உள்ளன. 
இத்தொகுதியைப் பொருத்தவரை தலித்துகள், வன்னியர்கள் பெரும்பான்மை சமூகத்தினர். கணிசமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் அதற்கடுத்த நிலைகளில், முக்குலத்தோர், வெள்ளாளர், நெசவாளர், கிறிஸ்தவர் மற்றும் பிற சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் இத்தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கே. ஆனந்தநம்பியார். மற்றொருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற வி. வீராசாமி.  1962 -இல் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக் கணக்கை தொடங்கியவர் மறைந்த மரகதம் சந்திரசேகர்.  
1952 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை இத்தொகுதியில் நடைபெற்ற 16 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று,  இத்தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சியாக முதன்மைப் பெற்றுள்ளது. திமுக, அதிமுக, தமாகா ஆகிய கட்சிகள் தலா 2 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளன.
பிரச்னைகளும், 
கோரிக்கைகளும்...
வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதியில், காவிரி நதி நீர் பிரச்னையே தீப்பற்றி எரியும் பிரச்னையாகும். முப்போகம் சாகுபடி செய்யப்பட்ட டெல்டா மாவட்டங்களில், ஒருபோக சாகுபடிக்கே உறுதி செய்யப்படாத நிலையே இன்றும் தொடர்கிறது. வேளாண்மையை அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் போன்ற பெட்ரோலியத் திட்டங்களைக் கைவிட்டு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 
மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்,  மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், கும்பகோணம் மகாமகத்தை தேசிய விழாவாக அறிவித்து, மத்திய அரசே விழாவை முன்னெடுக்க வேண்டும். கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், கும்பகோணம் - திருச்சிக்கான ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், மன்னார்குடி- கும்பகோணம்- விருத்தாசலம் தடத்தில் ரயில் இயக்க வேண்டும், பொலிவிழந்த  பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பூம்புகார் - வானகிரி பகுதிகளில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதியில் நீண்டு நெடிந்து இருந்து வருகின்றன. 
இது தவிர, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளை சீரமைத்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் சந்தைப்படுகை - கிராம்பட்டு இடையே கதவணை அமைக்க வேண்டும், சீர்காழி உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், சீர்காழியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், சென்னை நான்குவழிச் சாலைக்காக சீர்காழி, ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் தொகை வழங்க வேண்டும், பாபநாசம் பகுதிகளில் சாலைகளைத் தரம் உயர்த்த வேண்டும், புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், திருவிடைமருதூர் தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
உள்பட பல்வேறு கோரிக்கைகளும், பிரச்னைகளும் இங்கு  
நிரம்பியுள்ளன.
தொகுதி நிலவரம்...
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த மறைந்த ஜி.கே. மூப்பனாரின் சொந்த ஊரை உள்ளடக்கிய தொகுதி என்ற வகையிலும்,  அதிக முறை வென்ற கட்சி என்ற வகையிலும், காங்கிரஸ் கட்சி பலம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி கருதப்பட்டது.  எனினும் 2009, 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து  வெற்றி பெற்று அந்த பிம்பத்தை தகர்த்துள்ளது.
திமுகவை பொருத்தவரை 1967, 1971 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் இத்தொகுதியில்  நேரடியாக களம் கண்டு வெற்றி பெற்றது. ஆனால், 1984, 1989 மற்றும் 1991 மக்களவைத் தேர்தல்களில், திமுக நேரடியாக களம் கண்டு தொடர் தோல்வியையே சந்தித்தது. இதைத் தொடர்ந்து,  கடந்த 28 ஆண்டுகளாக இத்தொகுதியில் நேரடியாக களம் காண்பதை தவிர்த்து வந்த திமுக, இந்த முறை நேரடியாக களம் காண்கிறது. 
இக்கட்சியின் வேட்பாளராக திருவிடைமருதூர் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான செ. ராமலிங்கம் களத்தில் உள்ளார். திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முறை வென்ற இவர், திமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். 
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு, தனக்குள்ள அறிமுகம், ஹைட்ரோ கார்பன் போன்ற வேளாண்மைக்கு எதிரான திட்டங்களால் மக்களிடையே ஏற்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலை,  சிறுபான்மையின மக்களிடம் நிலவும் பாஜக எதிர்ப்பு அலை, மக்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் இத்தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியன திமுகவுக்கு சாதகமாகக் குறிப்பிடப்படுகிறது. 


அதிமுகவின் வேட்பாளராக களம் கண்டுள்ள எஸ். ஆசைமணி, குத்தாலம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். இவர், நாகை மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்ற வகையிலும்,  கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்ற வகையிலும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மக்களிடையே அறிமுகம் பெற்றவர். 
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 53 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை 2,77,050 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ள நிலையில், அந்த வெற்றியை எளிதில் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது.   மேலும், கடந்த முறை இத்தொகுதியில் பெரிய கட்சிகளின் துணையின்றி களம் கண்டு 1,44,085 வாக்குகளைப் பெற்ற பாமக தற்போது, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பது அதிமுகவுக்கு சாதகமாகக் குறிப்பிடப்படுகிறது. 
இந்த இரு முக்கிய வேட்பாளர்களைத் தவிர அமமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். செந்தமிழன், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் எம். ரிபாயுதீன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும், தேர்தலுக்குப் புதியவர்கள்.  
அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமைக்கு உள்ள செல்வாக்கு மட்டுமே இவர்களுக்கு பலம்.   இவர்களால் இத்தொகுதியில்  மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றாலும், பிரதான எதிர்கட்சிக்குக் கிடைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளைப் பிரிப்பதில் இவர்களிருவரும் முக்கிய பங்கு வகிப்பர்  எனக் குறிப்பிடப்படுகிறது. 
இந்த நால்வரைத் தவிர, நாம் தமிழர் கட்சி கு. சுபாஷினி, பகுஜன் சமாஜ் கட்சி ந. கல்யாணசுந்தரம் என மயிலாடுதுறை மக்களைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இதில், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நிலம் நீர் இயக்கம் சார்பில் 7 பேர் சுயேச்சையாக களம் கண்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து, சுயேச்சை வேட்பாளர்களாக ஒன்றாகச் சேர்ந்து வாக்குச் சேகரிக்கும் புதிய உத்தியை 10 வேட்பாளர்கள் இங்கு கையாண்டு வருகின்றனர்.
இத்தொகுதியைப் பொருத்தவரை, திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கிடையே நேரடிப் போட்டியே நிலவுகிறது. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உருவான காலம் முதல், இதுவரையிலான காலத்தில், இத்தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியைச் சந்திக்காத நிலையில், இருபெரும் திராவிடக் கட்சிகளும் முதல்முறையாக இத்தொகுதியில் நேரடியாக களம் காண்பது, தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
வாக்காளர்கள் விவரம் : 
ஆண்கள்     7,27,720
பெண்கள்    7,39,040
இதரர்    50
மொத்தம்    14,66810
-எம். சங்கர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT