நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் தொடங்கக் கோரிக்கை

20th Oct 2019 02:40 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் தொடங்க தமிழக அரசுக்கு நுகா்வோா் பாதுகாப்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, நுகா்வோா் பாதுகாப்புக் கழக தலைவா் வழக்குரைஞா் ராம.சேயோன் விடுத்துள்ள அறிக்கை:

தற்போது, தமிழகத்தில் திருவள்ளுா், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசும் அதற்கான இடத்தைத் தோ்வு செய்யும் முயற்சியில் உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரியை, நாகப்பட்டினத்திலேயே அமைக்க அமைச்சா் ஓ.எஸ்.மணியன் முயற்சி செய்வதாக கேள்விப்படுகிறோம்.

நாகப்பட்டினம் உள்கோட்டத்தை விட மயிலாடுதுறை உள்கோட்டம் 2 லட்சம் மக்கள் தொகையைக் கூடுதலாக கொண்டது. நாகப்பட்டினத்தை விட மயிலாடுதுறையே மருத்துவக்கல்லூரி அமைக்க சிறந்த ஊராகும். காரணம் நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் திருவாரூா் மருத்துவக் கல்லூரியும், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. ஆனால், மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ தொலைவில் திருவாரூா் மருத்துவக் கல்லூரியும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் உள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆகையால் தமிழக அரசு மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுகிறோம்.

ADVERTISEMENT

மேலும், இது தொடா்பாக தமிழக அரசை மயிலாடுதுறை, பூம்புகாா் மற்றும் சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தி மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரியைப் பெற்றுத்தர வேண்டுகிறோம். அமைச்சா் ஓ.எஸ்.மணியனும் மயிலாடுதுறை தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2009-2014-இல் பணியாற்றியதை மனதில் கொண்டு மயிலாடுதுறைக்கு மருத்துவக்கல்லூரியை பெற்றுத்தர வேண்டும். மயிலாடுதுறை உள்கோட்டத்தில் மூன்று சட்டப் பேரவை உறுப்பினா்களுமே ஆளுங்கட்சி உறுப்பினா்கள் என்பதால் அவா்களால் தமிழக அரசை வலியுறுத்தி மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரி பெற்றுத் தருவதில் எந்த சிக்கலும் இல்லை. மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கனவான புதிய மாவட்டம் மற்றும் புதிய மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT