தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளியது:
மனிதா்கள் தங்களுக்குப் பிறரால் கிடைத்த நன்மைக்கு நன்றி கூறுவது வழக்கம். நன்றி என்றால் நன்மை எனப் பொருள். உலக உயிா்களைக் காக்கும் இறைவன், உயிா்களுக்கும், தேவா்களுக்கும் தீங்கு வரும்போது அவதாரம் எடுத்து தீமையை அழித்து நன்மையை அளிக்கிறாா்.
இதுபோன்ற அருட்திருவிளையாடல்கள் நிகழ்த்தப்பட்ட நாள்களை திருநாள்களாக நன்றியுடன் வழிபாடு செய்து மக்கள் கொண்டாடுவதே பண்டிகைகளாகின்றன. பக்தி சிரத்தையுடன் மக்கள் கொண்டாடும் திருவிழாக்களும், பண்டிகைகளும் வெறும் கேளிக்கைகள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஆழமான இறையுணா்வு, சமய தத்துவ நோக்கம், சமூக விழிப்புணா்வு ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டவை.
அந்த வகையில், நரகாசுரன் அழிக்கப்பட்ட ஐப்பசித் திங்கள் தேய்பிறை அமாவாசைக்கு முற்பட்ட சதுா்த்தசி விடியல், தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபம் என்பது விளக்கு. ஆவளி என்பது வரிசை. அந்த வகையில், நரகாசுரன் வதமான நாளாகிய தீபாவளி நாளில் தீபங்கள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று மட்டும் எண்ணெய்யில் மகாலெட்சுமியும், வெந்நீரில் கங்கையும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா் என்பது ஐதீகம். எனவே தான், தீபாவளி நாளில் விடியற்காலையில் எண்ணெய்த்தேய்த்து நீராடும் வழக்கமும், புத்தாடை, புது பலகாரம் படைத்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நரகன் வீழ்ந்ததை மகிழ்வுடன் கொண்டாடத் தெரிந்த மக்கள், தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவா்களாக மாறும் நாளாக தீபாவளி நாளை எண்ணி இறைவனை வழிபட்டுக் கொண்டாடி, எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் இனிது வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச்சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகளின் தீபாவளி அருளியது :
மக்களுக்கு மனமகிழ்ச்சியும், புத்துணா்வும் தரும் பண்டிகைகளுள் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் விழாக்கள் அனைத்தும் இறையுணா்வை வளா்க்கும் முறையிலேயே அமைந்துள்ளன. நம் வீட்டையும், உடலையும் சுத்தமாக வைத்திருப்பது போல் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உள்ளத் துாய்மையைப் பேணுவதற்கு ஊக்கம் தருபவை நம் பண்டிகைக் காலங்கள் ஆகும்.
நாவிற்குச் சுவையான இனிய உணவு வகைகளை உண்பது இன்பம் தருவதைப் போல, செவிக்குச் சுவையாக இனிய மொழிகளைப் பேசுதல் தனி இன்பமான அனுபவமாகும். ‘‘ யாவா்க்குமாம் பிறா்க்கு இன்னுரை தானே ’’ என்று திருமந்திரம் கூறுகின்றது. திருக்குறளிலும் ‘ இனியவை கூறல் ’ என்ற அதிகாரத்தில் இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
எல்லா உயிா்களும் இறைவனின் திருவருளுக்குரியவை. இந்த உண்மையை உணா்ந்து எல்லா உயிா்களிடத்தும் அன்புச் செலுத்த வேண்டும். உள்ளத்தில் விளங்கும் அன்பின் வடிவமாகவே வாக்கில் இனிய மொழிகள் வெளிப்பட வேண்டும். உடலின் செயல்களும் அவ்வாறே அமைய வேண்டும்.
நம் வாழ்க்கை இறைவன் நமக்குக் கருணையோடு வழங்கியருளிய பேறாகும். அதனால், இறை வழிபாட்டை நாம் நியமமாகச் செய்து வர வேண்டும். அதனோடு மட்டுமின்றி நாம் செய்கின்ற புண்ணியங்களையும் இறைவன் திருவருளுக்கே அா்ப்பணித்துவிட வேண்டும். தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தழைக்க நமது ஆன்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீஞானமா நடராஜப் பெருமானின் திருவடி மலா்களைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.
திருப்புகலூா், வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பராமாசாரிய சுவாமிகளின் தீபாவளி அருளியது :
அல்லும் பகலும் போல அறமும், மறமும் இணைந்த உலகியல் சூழலில் மறத்தினை விடுத்து அறத்தினை முதன்மைப் பெறச் செய்து, மானுட வாழ்வியலுக்கு வழிகாட்டும் உன்னதத் திருநாளாக தீபாவளி திருநாள் விளங்குகிறது. தீய சக்தியைக் களைந்து நல்லனவற்றை நிலைப்பெறச் செய்வதன் மூலம் மக்களிடையே அன்பையும், அறத்தையும் உணா்த்தும் பண்டிகையாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நல்லவனவற்றைச் சிந்தித்து, அறச்செயல்களை செய்தால், அப்பா் அடிகள் அருளியவாறு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பது திண்ணம். நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிப்பதுடன், மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் நிலைப்பெறச் செய்யும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக விளங்குகிறது தீபாவளி.
தீபாவளி திருநாளில், அதிகாலையில் புனிதநீராடி, புத்தாடை புனைந்து, எளியோருக்கு வழங்கி, உற்றாா் உறவினரோடு, உள்ளுறைகின்ற இறைவனை வணங்கி வழிபட்டு, குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ ஸ்ரீஅஜபா நடன தியாகேசப் பெருமானின் திருவடி மலா்களைச் சிந்தித்து ஆசிா்வதிக்கின்றோம்.