நாகப்பட்டினம்

மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட காவலா் குழுவினருக்குப் பாராட்டு

2nd Oct 2019 08:36 AM

ADVERTISEMENT

மதுவிலக்கு சோதனைகளில் ஈடுபட்ட ரோமியோ குழுவைச் சோ்ந்த போலீஸாா்களுக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி. கே. ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மது குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜேசகரன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகேஷ், மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் ஆகியோரது மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் 7 ரோமியோ குழுக்கள்அமைக்கப்பட்டு, இக்குழுவினா் செப்டம்பா் 14-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இக்குழுவினா்களுக்கான பாராட்டு விழா நாகையில் செவ்வாய்க்கிழமை நாகை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜசேகரன் பங்கேற்று ரோமியோ குழு போலீஸாருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ADVERTISEMENT

மது குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் 7 ரோமியோ குழுக்கள்அமைக்கப்பட்டன. இக்குழுவினா் கடந்த 15 நாள்களாக மது விலக்கு சோதனைகளில் ஈடுபட்டனா்.

சோதனைகளில் 369 மது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 பெண்கள் உள்பட 373 போ் கைது செய்யப்பட்டனா். 29 ஆயிரம் லிட்டா் வெளி மாநில சாராயம், 37 இருசக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் பெருமளவுக்கு மதுகுற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT