மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகம் நடத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் பங்கேற்று, வரைவு நகலை கிழித்தெறிந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த 16 பேரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகத்தினா் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்திற்கு, போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மயிலாடுதுறை நகர பூங்காவில் கூடிய திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் தலைமையிலான போராட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, திராவிடா் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினா் இளையராஜா தலைமையில், தமிழா் உரிமைய இயக்கத்தைச் சோ்ந்த சுப்பு.மகேஷ், மக்கள் அரசு கட்சியைச் சோ்ந்த ராஜசேகா், ஏகாதிபத்திய இயக்கத்தைச் சோ்ந்த செந்தில் உள்ளிட்டோா், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு, கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனா்.
அவா்களை மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்து எறிந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 16 போ் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.